இல்லம் தேடி கல்வி திட்டத்தில் சிறப்பாக செயல்படும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கபடும் என விருதுநகர் மாவட்ட இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் தெரிவித்துள்ளார்.
ஹைலைட்ஸ்:கோடை விடுமுறையில் செயல்படும் இல்லம் தேடி கல்வி மையங்கள்
சிறப்பாக செயல்படும் தன்னார்வளர்களுக்கு ஊக்கத்தொகை
கொரோனா பரவல் காரணமாக சுமார் 2 ஆண்டுகள் பள்ளிகள் செயல்படாத நிலையில், இந்த கற்றல் இழப்பை ஈடு செய்யும் வகையில் அரசு இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இதற்கு பெற்றோர், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
கோடை விடுமுறையை முன்னிட்டு மே 14 ம் தேதி முதல் மே 31 ம் தேதி வரை மையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் மையங்களை நடத்த தடையில்லை என கல்வித் துறை தெரிவித்து இருந்தது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லி கிராமத்தில் செயல்பட்டு வரும் மையத்தில் விடுமுறை தினத்திலும் மாணவர்கள் ஆர்வத்துடன் வந்திருந்து பல்வேறு கற்றல் தொடர்புடையை மகிழ்விக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். விடுமுறை நாட்களில் மையத்திற்கு வரும் மாணவர்களுக்கு நூலகம், அஞ்சல் நிலையம், வங்கி ஆகிய செயல்பாடுகள் நேரிடையாக அழைத்துச் செல்லப்பட்டு விளக்கப்படுகிறது.
ஆடல், பாடல், குறுநாடகங்கள், விளையாட்டு, கதைகள் மூலம் கற்றலில் ஆர்வம் தூண்டப்பட்டு வருகிறது.
மையத்தைப் பார்வையிட்ட, இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ், மையத்தின் தன்னார்வலர் மகாலட்சுமி சிறப்பாக செயல்படுதையொட்டி, அவருக்கு ரூ.1000 ரொக்கப் பரிசு ஊக்கத் தொகையாக தனது சொந்தப் பணத்தில் அளித்து பாராட்டினார்.
மேலும் மாதம் மூன்று தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு ஊக்கத் தொகை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment